Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அதிகரிக்கும் டெங்கு - ஒருநாள் காய்ச்சல் என்றாலும் வைத்தியரை நாடுங்கள்


யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்தின் கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் கருத்து  தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்தில் ஜூலை 08ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயுடன் 694 நோயாளர்கள் இனம் காணப்பட்டிருக்கின்றார்கள். 

எந்தவித இறப்பும் இந்த வருடம் பதிவு செய்யப்படவில்லை. கடந்த வருடமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தவொரு இறப்புமே பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் இறுதி பகுதி வரை டெங்கு நோய் யாழ்ப்பாண மாவட்டத்திலே ஒரு பூரணமான கட்டுப்பாட்டிலே இருந்து வந்தது. 

ஆனால் தற்போது நாட்டின் தென்பகுதியிலே ஏனைய பல மாகாணங்களிலே டெங்கு நோயின் பரம்பல் மிகத் தீவிரமாகக் காணப்படுகின்றது. 

இந்த பின்னணியிலே, ஜூலை மாதம் முதல் 7 நாட்களிலே 65 நோயாளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலே டெங்கு நோயுடன் இனம் காணப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு சடுதியான அதிகரிப்பாகும்.

மேல் மாகாணத்திலே, குறிப்பாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலே அதிகமான டெங்கு நோயாளர்கள் தற்போது இனம் காணப்பட்டிருக்கின்றார்கள். 

அவ்வாறான நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் தென்பகுதியிலே, குறிப்பாக மேல் மாகாணத்திலே இருக்கின்ற பல்கலைக்கழகங்களிலே, உயர்கல்வி நிறுவனங்களிலே கல்வி கற்கின்றார்கள். 

அதேபோன்று பலர் தொழில் நிமித்தம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கொழும்பிலே தங்கியிருந்து தொழில் செய்து வருகின்றார்கள். அவர்கள் விடுமுறைக்கு இங்கே வருகின்றபோது,  பலர் டெங்கு நோயுடன் வந்து எங்களுடைய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

எனவே, தற்போது யாழ்ப்பாண மாவட்டத்திலே நாங்கள் செய்த பூச்சியியல் ஆய்வு பார்க்கின்றபோது, யாழ்ப்பாண மாவட்டத்திலே இந்த டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளின் குடம்பிகளின் செறிவு அதிகமாகக் காணப்படுகின்றது. 

அதேவேளை மேல் மாகாணத்திலிருந்து அல்லது ஏனைய மாகாணங்களிலிருந்து வருகின்றவர்கள் மூலம் இங்கே டெங்கு மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கின்றது. 

எனவே, இந்த சூழ்நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து, தங்களுடைய வீடுகள், வேலைத்தளங்கள், பொது இடங்களில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகாமல் துப்புரவாக்குவதன் மூலம் எங்களுக்கு ஒத்துழைப்பை வழங்கிக் கொள்ளமுடியும்.

கடந்த வருடமும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலே எந்தவொரு இறப்பும் ஏற்படாமல் நாங்கள் தடுத்திருக்கின்றோம். 

கடந்த காலங்களிலே எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, இறப்புகளை நாங்கள் அவதானிக்கின்ற போது, பொதுவாக மிகத் தாமதமான நிலையிலே வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட போதுதான் இப்படிப்பட்ட இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 

எனவே, நாங்கள் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம், இக்காலப்பகுதியிலே காய்ச்சல் ஏற்பட்டால், அது ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் பரவாயில்லை, உடனடியாகச் சென்று தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

அதன்மூலம் நாங்கள் இந்த டெங்கு நோயினாலே ஏற்படக்கூடிய இறப்புகளை நாங்கள் தவிர்க்கக்கூடியதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார். 

No comments