காங்கேசன்துறை பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி மற்றும் விநியோகக் கைத்தொழிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விடுவிக்கப்பட்டுள்ள காணிப் பகுதியில் சிமெந்து பொதியிடல் மற்றும் விநியோகம் தொடர்பான கைத்தொழிலை முன்னெடுப்பதே சிறந்த திட்டமாகும்.
குறித்த பகுதியில் இருந்து எவ்வித மூலப்பொருட்களையும் அகழ்ந்தெடுக்காமல், இந்தியாவில் இருந்து சிமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றை கலந்து சிமெந்து தயாரித்து அங்கிருந்தே விநியோகம் செய்ய முடியும்
இதற்கான முதலீட்டை மேற்கொள்ள ஏற்கனவே முதலீட்டாளர் ஒருவர் தயாராக இருக்கின்றார், குறித்த முதலீட்டாளரின் திட்ட மதிப்பீடு ஏற்கனவே முதலீட்டு ஊக்குவிப்புச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்திட்ட மதிப்பீடு கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் முன்மொழியப்படும் இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் 1,000 பேருக்காவது நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் எனவே இது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும்
மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் ஒத்துழைப்பை பெரிதும் மதிப்பதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.









No comments