யாழ்ப்பாணத்திற்கான ஒருங்கிணைந்த நகர மற்றும் போக்குவரத்துத் திட்டம் அடுத்த தலைமுறையையும் கருத்திற்கொண்டு அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து முதன்மைத் திட்டத்திற்கான பணிக்குரிய ஆய்வுக்கான விடயங்களை ஆராய்வு செய்வதற்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல், நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர மற்றும் போக்குவரத்துத் திட்டம், அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து, அறிவுசார் நிபுணர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, எதிர்காலத் தலைமுறையினரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு நீண்டகாலப் பயனளிக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாணம் – பலாலி, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மானிப்பாய் உள்ளிட்ட பிரதான போக்குவரத்துப் பாதைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த முறையில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் போன்ற முக்கிய இணைப்புகளின் எதிர்கால வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டமைப்புகள் திட்டமிடப்பட வேண்டும்
யாழ்ப்பாண நகரில் தற்போதுள்ள பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து வசதிகள் எதிர்காலத் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் முறையான வாகனத் தரிப்பிடங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்
குறிப்பாக வைத்தியசாலை வீதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுவதைக் கருத்திற்கொண்டு, மாவட்டச் செயலகம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனங்களுக்கு தனியான பாதையை ஏற்படுத்துவதுடன், நடைபாதை மற்றும் வாகனப் பாதைகளை முறையாகப் பிரித்து அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும்
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களின் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான தரிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வைத்தியசாலை வீதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைத்து, வீதியின் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்த முடியும்
அதேவேளை நகரப் பகுதிகளில் முச்சக்கர வண்டிகளுக்கு தனித்தனியான ஒழுங்குபடுத்தப்பட்ட தரிப்பிடங்களை அமைத்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை நிர்வகிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்
மேலும், மானிப்பாய், மருதனார்மடம், காங்கேசன்துறை போன்ற முக்கிய நகர மையங்களில் புதிய பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும்.
குறிப்பாக மானிப்பாய் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடவசதிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் நகரங்களாகவும் முக்கிய போக்குவரத்து மையங்களாகவும் வளரக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு திட்டமிட வேண்டும்.
நகர அபிவிருத்தியின் போது சிறிய அளவிலான தனித்தனி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதை விட, வர்த்தக நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வாகனத் தரிப்பிடங்கள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த முழுமையான நகர அபிவிருத்தித் திட்டமொன்று அவசியம்.
மேலும், தற்போதுள்ள பழைய வர்த்தகக் கட்டடங்களை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நவீன வர்த்தக மற்றும் குடியிருப்புத் தொகுதிகளாக அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட வேண்டும்.
இவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் போது வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்
அதேவேளை, எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பேருந்து சேவைகள், குளிரூட்டப்பட்ட பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் ஊரகப் போக்குவரத்து சேவைகளின் தேவைகளையும் தற்போதைய திட்டமிடலில் உள்வாங்க வேண்டும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேவையான நிலவளங்கள் காணப்படுவதால், அவற்றை முறையாக அடையாளம் கண்டு, விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில் நீண்டகாலத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
உரிய திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி மற்றும் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.









No comments